புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அரிதாகி வரும் நிலையில், பல பூர்வீக மாட்டினங்கள் அழியும் சூழலில் இருக்கின்றன.
இப்போது இருக்கும் பெரும்பாலான மாடுகள் மேலைநாட்டு மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.
அரியானாவில் ஒரு குடும்பம் வளர்க்கும் 5 அடி 11 அங்குலம் உயரத்துடன், 1,500 கிலோ எடை கொண்ட சுல்தான் எனும் ஆண் எருமையின் விந்தணுவை செயற்கையாக சேகரித்து ஒரு டோஸ் ரூ300க்கு விற்பனை செய்கின்றனர். வருடத்திற்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இந்தியா முழுவதும் இதன் விந்தை விநியோகம் செய்கின்றனர்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த முறை பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது.
செயற்கை முறை இனக் கலப்பு மூலமாகவே பால் உற்பத்தி பெருகியது. ஆனால் அதே சமயம் இதனால் பல அரிய வகை மாடுகள் வளர்ப்பு குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய நிலை வந்துவிட்டது.
பூர்வீக மாடுகள் அளவில் சிறியதாகவும், திமில்களுடன் இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள், குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி, வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. ஆனால் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்யும் போது இந்த மரபியல் குணங்கள் இழக்கப்படுகின்றன.
அண்மையில் நடமாடும் கால்நடை இனப்பெருக்க சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களையும் முற்றிலும் அழிக்கும் தன்மை வாய்ந்தது.
இந்த சட்டத்தில் காளை மாடுகள் விந்து உற்பத்திக்கு ஏற்ற வகையில் இல்லை என்றால் அவற்றை கொல்ல வேண்டும் என்றும், தன்னுடைய வீட்டில் வளர்க்கின்ற காளையை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த கூடாது என்றும் சட்டம் சொல்கிறது.
மாடுகள் மட்டும் அல்ல, ஆடு, கோழி என கால்நடைகளும், விலங்குகளும் வணிக நோக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது. அவற்றை கட்டாயமாக மீட்க வேண்டும்.
விலங்குகள் மனிதனின் பயனுக்காக மட்டும் இல்லை. அவற்றையும் சக உயிர்களாக பாவித்து மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment